தர்மர் ராஜசூய யாகம் செய்யத் தொடங்கினார்.யாக சாலையைத் தூய்மை செய்வதற்காக, அவர் பீமனை அழைத்து,புருஷா மிருகத்தை அழைத்து வர உத்தரவிட்டார்.புருஷாமிருகம் என்பது, அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு.
புதுமனை புகுவிழாவின்போது பசுவையும், கன்றையும் புதுமனையில் உலாவரச் செய்வதைப்போல,யாக சாலையில் புருஷாமிருகத்தை உலா வரச்செய்வார்கள்.அதை முன்னிட்டே தர்மர் அந்த மிருகத்தை அழைத்து வருமாறு பீமனிடம் சொன்னார்.
இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷா மிருகம்.வேகமாக ஓடக்கூடிய புருஷாமிருகத்தை வெல்வதற்கு,அதன் பலவீனத்தை அறிந்துவைத்திருந்தான் பீமன்.
புருஷாமிருகம் மிகச்சிறந்த சிவ பக்தன்.எங்கேயாவது சிவ லிங்கத்தைப் பார்த்துவிட்டால்,சிவ பூஜையை முடித்துவிட்டுத்தான் அது பயணத்தைத் தொடரும்.
பீமனும் சென்று புருஷாமிருகத்தை அழைத்தான்.அது வருவதற்கு ஒப்புக்கொண்டது.என்றாலும், ஒரு நிபந்தனை விதித்தது.பீமா நான் உன் பின்னால் வருகிறேன்.உனக்கும் எனக்கும் எப்போதும் நான்கு காத தூரம் இடைவெளி இருக்க வேண்டும். இடைவெளி குறைந்தால், உன்னைப் பிடித்துக் கொன்று தின்றுவிடுவேன்.இதற்கு நீ ஒப்புக் கொண்டால், உன்னுடன் வருகிறேன் என்றது.பீமன் சரி என்றான் .புருஷாமிருகம், அப்படியென்றால் சரி, நீ முன்னால் ஓடு நீ நான்கு காத தூரம் தாண்டியதும், நான் இங்கிருந்து புறப்படுவேன் என்றது.மிருகமாக இருந்தாலும், நீதி நேர்மையாக ஓட்டம் துவங்கியது.
வேக வேகமாக ஓடிய பீமனைப் பின்தொடர்ந்து ஓடிய புருஷா மிருகம், ஒரு கட்டத்தில் பீமனை நெருங்கிவிட்டது.உடனே பீமன், புருஷாமிருகத்தின் பார்வையில் படும்படியாக ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு, மேலே ஓடினான்.புருஷாமிருகம் சிவலிங்கத்தைப் பார்த்ததும்,தனது வழக்கப்படி சிவபூஜையைச் செய்துவிட்டு,
மீண்டும் ஓட்டத்தைத் தொடங்கியது.அதற்குள் பீமன் வெகு தூரம் ஓடிவிட்டான். சற்று நேரத்துக்குள்ளாகவே புருஷாமிருகம் பீமனை நெருங்கிவிட்டது.
பீமன் மீண்டும் ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு, ஓட்டமாய் ஓடினான்.புருஷாமிருகமும் சிவ பூஜையை முடித்துவிட்டு, பிறகு ஓட்டத்தைத் தொடர்ந்தது.இதே உத்தியைக் கையாண்டு வேக வேகமாக ஓடிய பீமன்,தனது எல்லைக்குள் ஒரு காலை வைத்தான்.
அடுத்த கால், எல்லைக்கு வெளியே இருந்தது.புருஷாமிருகம், பீமனின் அந்தக் காலைப் பிடித்துக்கொண்டு, உன்னைப் பிடித்துவிட்டேன்.எனக்கு உணவாக வேண்டிதுயதான் என்றது.
பீமனோ அதை மறுத்தான்.
தர்மரிடம் போனார். பீமனும் புருஷாமிருகமும் தர்மரிடம் போய், நடந்ததைச் சொன்னார்கள்.பொறுமையாகக் கேட்ட தர்மர் பீமா உன்னுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லையில் இருக்கும் போது,அது உன்னைப் பிடித்துவிட்டதால்,உன் உடலில் சரிபாதியை புருஷாமிருகத்திடம் கொடுத்து விடுவதுதான் சரி ’ என்று தீர்ப்பு வழங்கினார்.தன் தம்பியாக இருந்தாலும், அவனுக்குச் சாதகமாக பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்காமல்,தர்ம நெறிப்படி நடந்துகொண்ட தர்மரை அனைவரும் பாராட்டினார்கள்.
தர்மரின் நடுநிலை தவறாத நேர்மை பீமனின் உயிரைக் காத்தது.
Comments