காஷ்யப முனிவரின் புத்திரர்களான சிங்கமுகன், சூரபத்மன், தாரகா சூரன் மூவரும் சிவனிடம் சாகவரம் பெற்று அகந்தையால் பல அட்டூழியங்களை செய்து வந்தனர். அவர்களை அழிக்கவே முருகன் அவதரித்தார். சிவனின் அம்சமான சிவகுமாரன் முருகன் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்.
சூரபத்மன் கடலின் நடுவில் வீர மகேந்திரபுரி என்ற பட்டினத்தில் வசித்தான். முருகன் அங்கு வந்து சூரனை போருக்கு அழைத்தார். சிங்கமுகன் மற்றும் தாரகாசூரன் (யானைமுகன்) கொன்று கிரவுஞ்ச மலையையும் அழித்தார். பின்னர் சூரபத்மனுடன் போரிட்டார். அவன் முருகனின் விஸ்வரூபம் கண்டு தன்னை மன்னிக்க வேண்டி மாமரமாக நின்றான். முருகப் பெருமானும் அவனை மன்னித்து மாமரத்தை பிளந்து சேவலாகவும் மயிலாகவும் மாற்றி தன் வாகனமாகவும் கொடிச்சின்னமாகவும் ஏற்றார்.
ஐப்பசி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறுதினங்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதாகும்.
ஸ்கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். அங்கு முதல் நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி ஆறு நாட்கள் உற்சவத்தில் இறுதி நாள் சூர சம்ஹாரம் நடைபெறும்.
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
சஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் நீராட வேண்டும்.
பகலில் பழம் அல்லது பால் மட்டுமே உண்ணவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம். மதியம் பச்சரிசி சாதமும் தாளிக்காத துவையல் வைத்து சாப்பிடலாம்.
திருப்புகழ்,கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம் போன்ற கவசங்களை பாராயணம் செய்யலாம்.
மாலையில் மீண்டும் குளித்து விட்டு வீட்டில் பூஜையறையில் முருகரை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலில் வழிபாடு செய்யலாம்.
இவ்வாறு ஆறுநாட்கள்செய்து ஆறாவது நாளில் பகலில் உபவாசம் இருந்து சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பானகாரம் வீட்டில் வைத்து பூஜை செய்து முருகர் கோயிலில் தரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும்.
புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் இதனால் தான் சட்டியில் இருந்தால் தான் ஆப்பையில் வரும் என்பர். சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பார்கள்.
