லட்சுமி விரதம் பூஜை முறை

பூஜைக்குத் தேவையானவை :

 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

 பழ வகைகள்:

ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...

 பூஜைக்கான முன்னேற்பாடுகள்:

வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். மஞ்சள் பில்ளையார் பிடித்து வைத்து அதில் அருகம்புல் சொருகி வினாயகர் மந்திரத்தை உச்சரித்து விட்டு,மகாலட்சுமி துதியை சொல்லவும்..

அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.சிறு பெண் குழந்தைகளை அழைத்து வந்து பூஜையில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும் அவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் பூஜையின் இறுதியில் கொடுத்து கையில் மஞ்சள் கயிறு கட்டி அனுப்பவும்...ஓம் நமோ நாராயணா..!!

 அந்த பதினாறு லட்சுமிகளின் பெருமைகளைக் காண்போம்.

1. சௌந்தர்ய லட்சுமி
நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முகவசீகரம் இருந்தால்தான் அவர்கள் நம்மை வரவேற்பார்கள். இதற்கு "சௌந்தர்ய லட்சுமீ கரம்' என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். இதற்காக முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்தல் வேண்டும்.

2. சௌபாக்கிய லட்சுமி

போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபடல் வேண்டும்.

3. கீர்த்தி லட்சுமி

எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், நமது பெயர் சமூகத்தில் பல பேருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.

4. வீரலட்சுமி

நம்மையும், நமது மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றையும் காப்பாற்றிக் கொள்ள நம்மிடம் வீரம் இருக்க வேண்டும். இந்த வீரத்தை அளிப்பவள் வீரலட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கியத்தைப் பெறலாம்.

5. விஜயலட்சுமி
மனிதனுக்கு எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தாலும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள் புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம்.

6. சந்தான லட்சுமி
மனிதனுக்கு அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், அவனுக்கு குழந்தை இருந்தால்தான் அவன் பெருமை அடைகிறான். அது நல்ல குழந்தையாகவும் இருக்க வேண்டும். இதற்கு அருள் புரிபவள் சந்தான லட்சுமி. அவளை வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

7. மேதா லட்சுமி
பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.

8. வித்யா லட்சுமி
கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று பலவகைப்பட்டது. இவை அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது "ஸ்ரீவித்யை' என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யாலட்சுமி யின் அருள் வேண்டும்.

9. துஷ்டி லட்சுமி
எல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந்தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.

10. புஷ்டி லட்சுமி
வெளியுலகில் நாம் பழகும் போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.

11. ஞான லட்சுமி
வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல. நாம் ஆசைப்பட்ட பொருட்கள் யாவும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டுப் பிரிந்து விடும் என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.

12. சக்தி லட்சுமி
இறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங் களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் அவசியம் தேவை. இதனைப் பெற சக்திலட்சுமியை வணங்கினால் போதும்.

13. சாந்தி லட்சுமி
எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.

14. சாம்ராஜ்ய லட்சுமி
மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.

15. ஆரோக்கிய லட்சுமி
மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப் பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.

16. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி

மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது. இந்த ஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும்.

பதினாறு லட்சுமிகளைப் பூஜை செய்து எல்லா பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்

கருத்துகள்