நரசிம்ம அவதாரம்

திருமாலின் நான்காவது அவதாரம். இவ்வதாரம் கிருத யுகத்தில் நடைபெற்றது.

நரசிம்மம் என்பதனை நரன் சிம்மம் என்று பிரிக்கலாம். நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மமூர்த்தி சிங்கத்தலை மற்றும் கைகளில் சிங்க நகம் கொண்டு மனித உடலுடன் அருள்பாலிக்கிறார்.

இரண்யகசிபு என்ற அரக்கன் பிரம்மதேவரிடம் சகாவரம் வேண்டி கடும்தவம்  புரிந்தான். பிரம்மதேவர் பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் மரணம் என்பது  நிச்சயம். ஆதலால் சகாவரத்திற்குப் பதில் வேறுவரம் கேட்குமாறு பணித்தார்.

இரண்யகசிபு தனக்கு மரணம் என்பது பகலிலோ, இரவிலோ, ஆயுதங்களினாலோ, உள்ளேயோ, வெளியிலோ, மனிதராலோ, விலங்குகளாலோ, முனிவர்கள் மற்றும் தேவர்களாலோ ஏற்படக்கூடாது என்ற வரத்தினைப் பெற்றான்.

தான் பெற்ற வரத்தினால் தனக்கு அழிவில்லை என்ற கர்வத்துடன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினான். இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் திருமாலின் பக்தனாவனான். ஆதலால் இரண்யகசிபு பிரகலாதனை பலவழிகளில் கொல்ல முயன்றான்.

இறுதியில் ஒருநாள் அந்திவேளையில் பிரகலாதனிடம் உன் இறைவன் எங்கிருக்கிறார்? என்றான். பிரகலாதன் என் இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றான்.

அதற்கு இரண்யகசிபு தூணினைக் காட்டி இந்த தூணில் இருக்கிறானா? என்றான். அதற்கு பிரகலாதன் ஆமாம் என்றவுடன் தூணினை தன் கையில் வைத்திருந்த கதாயுதத்தால் பிளந்தான்.

அதிலிருந்து திருமால் சிங்க முகம் மனித தலையுடன் நரசிம்மாக வெளிப்பட்டார். இரண்யகசிபுவை வாயிற்படியில் வைத்து நகத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்று உலக மக்களை துன்பத்திலிருந்து காப்பாற்றினார்.

நரசிம்ம அவதாரத்தின் மூலம் இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்தவன் என்பதும், பக்தியின் மூலம் இறையருள் பெறலாம் என்பதும் அறியப்படுகிறது.

மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோயில்கள் புகழ்பெற்றவை.

கருத்துகள்